Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ராமசாமி சொல்வதென்ன?
இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சீனு ராமசாமி - ஜி.எஸ்.தர்ஷனா தம்பதியின்17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
இதுகுறித்த அவரது பதிவில், "அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்." என எழுதியுள்ளார்.
மேலும் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியிருப்பதையும் தெரிவித்துள்ளார். "இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துகள் எங்களுக்கு ஊக்கம்." என்று தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி தேசிய விருது பெற்ற இயக்குநர். இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவியாளராக பணியாற்றிய இவர், 'கூடல் நகர்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக உருவானார். அதே 2007ம் ஆண்டில் அவருக்கு திருமணமும் நடைபெற்றுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் சமீபத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை உள்பட பல படங்களை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.
இவரது எழுத்தில் `புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை', `காற்றால் நடந்தேன்', `மாசி வீதியின் கல் சந்துகள்', 'கோயில் யானையின் சிறுவன்' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.
சீனு ராம்சாமி - தர்ஷனா தம்பதிக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.