FIFA World Cup : `2034 உலகக்கோப்பையை நடத்தும் சவுதி அரேபியா' - அப்டேட் கொடுத்த FIFA
2034 ஆம் ஆண்டுக்கான FIFA கால்பந்து உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடைசியாக 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் நடந்திருந்தது. 2026 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் நடக்கப்போகிறது. 2030 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை மொரோக்கோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் நடக்கவிருக்கிறது. இந்த 2030 உலகக்கோப்பைக்கு இன்னொரு சிறப்பம்சமும் இருக்கிறது. அதாவது, உலகக்கோப்பைத் தொடர் தொடங்கப்பட்டு நூறாம் ஆண்டில் அந்த உலகக்கோப்பை நடக்கவிருக்கிறது. இதனால் அந்த உலகக்கோப்பை கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது.
இதனைத் தொடர்ந்து 2034 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2034 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை நடத்த விருப்பமுள்ள நாடுகளின் விண்ணப்பங்களை FIFA கடந்த ஆண்டு பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவும் சவுதி அரேபியாவும் அந்த உலகக்கோப்பையை நடத்த ஆர்வம் காட்டியிருந்தன. ஆனால், வேறு சில முக்கியமான விளையாட்டுத் தொடர்களையும் இடைப்பட்ட காலத்தில் நடத்தவிருப்பதால் ஆஸ்திரேலியா இந்த ரேஸிலிருந்து பின் வாங்கியது. இதனால் சவுதி அரேபியாவுக்கு 2034 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை நடத்தும் உரிமம் வழங்கப்பட்டது. FIFA அமைப்பின் வரைமுறைகளின் படி 5 க்கு 4.2 மதிப்பெண்களை சவுதி அரேபியா பெற்றிருக்கிறது.
2034 உலகக்கோப்பையில் மொத்தம் 104 போட்டிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக சவுதி அரேபியா புதிதாக 15 மைதானங்களை கட்ட திட்டமிட்டிருக்கிறதாம்.