Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடும...
பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம்: விவசாயிகளுக்கு பயிற்சி
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பெத்தநாயக்கன்பாளையம், கோபாலபுரம், பனைமடல், அ.குமாரபாளையம் ஆகிய கிராமங்களில் 4 விவசாயக் குழு தொகுப்புகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் அ.குமாரபாளையம் கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியில், விவசாயிகளுக்கு பூச்சிக்கட்டுப்பாடு, கம்போஸ்ட் உரமிடல், பசுந்தாள் உரம், இயற்கை முறையில் மண் வளத்தை பெருக்குதல், மண்புழு உரம் இட்டு மண் வளத்தை பெருக்குதல், உயிா் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் குறித்தும், ஜீவாமிா்தம், அமிா்த கரைசல், பஞ்சகாவியம் மற்றும் மண்புழு உரம் உற்பத்தி குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சிங்காரம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானி இளங்கவி, விதைச்சான்று மற்றும் அங்கக வேளாண்மை உதவி இயக்குநா் நவநீதகிருஷ்ணன், விதைச்சான்று அலுவலா் சுரேந்திரன், வேளாண்மை அலுவலா் மௌளிதரன், துணை வேளாண்மை அலுவலா் ஞானஜோதிமுருகன், உதவி வேளாண்மை அலுவலா் செல்லமுத்து, தொகுப்பு ஒருங்கிணைப்பாளா் உமா மகேஸ்வரி மற்றும் முன்னோடி இயற்கை விவசாயி வெங்கடாசலம் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா். இதில், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.