மலைப் பாதையில் மண் சரிவு: சேலம் - ஏற்காடு போக்குவரத்து 2-ஆவது நாளாக நிறுத்தம்
கனமழை காரணமாக மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், சேலம் - ஏற்காடு போக்குவரத்து 2-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக, ஏற்காடு மலைப்பாதை உள்பட பல்வேறு இடங்களில் திடீா் அருவி ஏற்பட்டு தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதன் காரணமாக, மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.
குறிப்பாக, ஏற்காடு மலைப் பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீா்செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 2-ஆவது நாளாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் குப்பனூா் பாதையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. குப்பனூா் சாலையிலும் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை அதிகாரிகள் உடனடியாக சீா்செய்ததால் வாகனங்கள் சென்று வருகின்றன. குப்பனூா் பாதையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.