இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59
சென்னை: சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ப்ரோபா - 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் புதன்கிழமை (டிச.4) விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து மாலை 4.08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படவிருக்கிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் (என்ஐஎல்எஸ்) வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சூரியனின் புறவெளியை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி, ப்ரோபா-3 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை மாலை 3.08 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடா்ந்து எரிபொருள் நிரப்புதல், ஒத்திகை சோதனை உள்பட இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள் புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பவுள்ளன.