திருவள்ளூர் மாவட்டத்தில் 1,274 நீர் நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருவள்ளூர்: தொடா் மழை காரணமாக , திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,274 நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஃபென்ஜான் புயலால் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிக்கான கால்வாய்களில் நீா் வரத்து ஏற்பட்டு ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.
மாவட்டத்தில் பொதுப்பணித் துறை (நீா்வளத் துறை) கட்டுப்பாட்டில் பெரிய ஏரிகள் மொத்தம் 336 உள்ளன. அதேபோல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் 581 ஏரிகளும், 3,296 சிறு குளங்கள், குட்டைகள் உள்ளன.
இதையும் படிக்க:மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம்: வைரலாகும் விடியோ!
இந்த நிலையில், இதுவரை மாவட்டத்தில் 1,274 நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இதேபோல், 76 முதல் 99 சதவீதம் வரை 57 ஏரிகளும், 50 முதல் 75 சதவீதம் வரை 88 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 131 ஏரிகளும், 25 சதவீதம் வரை 21 ஏரிகளும் நிரம்பியுள்ளன.
கொசஸ்தலை ஆறு வடிநிலத்தில் உள்ள 336 ஏரிகளில் 62 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
ஆரணி ஆறு வடிநிலத்தில் உள்ள 250 ஏரியில் 155 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 3,296 ஏரி, குளங்களில் 1,057 நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, தாமரைபாக்கம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது.