தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம்
சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர பிரதேச காவல்துறையின் சிஐடி பிரிவு கூடுதல் தலைவர்(ஏடிஜிபி) பொறுப்பிலிருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி என். சஞ்சய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிஐடி தலைவராக என். சஞ்சய் செயல்பட்டபோது, அரசியல் தலைவர்கள் உள்பட செல்வாக்குமிக்க நபர்கள் பலர் மீதான வழக்குகளை விசாரணை மேற்கொண்டவர். அந்த வகையில், மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், சந்திரபாபு நாயுடு மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை என். சஞ்சய் தலைமையில் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், சிஐடி அதிகாரிகளால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி என். சஞ்சய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச அமலாக்க மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணையில், என். சஞ்சய் மாநில பேரிடர் மற்றும் தீயணைப்பு துறை தலைவராக இருந்த போது, ரூ. 1 கோடி அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. தலைமைப் பொறுப்பில் அவர் இருந்த காலத்தில், மேற்கண்ட துறைக்கான இணையதள பக்கம் வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்காக விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக ஆந்திர பிரதேச அமலாக்க மற்றும் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், தனியார் நிறுவனம் ஒன்று சார்பில் நடத்தப்பட்ட பட்டியலினப் பிரிவினருக்கான விழிப்புணர்வு நிகழ்சிக்காக அவர் ரூ. 1 கோடிக்கும் மேல் வழங்கியதாகவும், ஆனால் மேற்கண்ட தனியார் நிறுவனம் பெயரில் ஹைதராபத்தில் எந்தவொரு நிறுவனமும் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்திருப்பதாக விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளைத் தொடர்ந்து, என். சஞ்சய்யை பணியிடை நீக்கம் செய்ய ஆந்திர பிரதேச தலைமைச் செயலர் நீரப் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆணையில், என். சஞ்சய் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.