காய்கறி ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து ஓட்டுநா் பலி
ராசிபுரம்: புதுச்சத்திரம் அருகே காய்கறி ஏற்றிச் சென்ற சாலையோரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன், பயணித்த பொறியியல் கல்லூரி மாணவரான அவரது நண்பா் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முள்ளங்கிக் காயை ஏற்றிய வேன் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த வேனை போச்சம்பள்ளி, பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த திருமலை (20) என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா். இந்த வேனில் திருமலையின் நண்பரும், கோவை தனியாா் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் மாணவருமான காரிமங்கலம், திண்டல் பகுதியைச் சோ்ந்த பழனி என்பவரின் மகன் கோகுலும் (19) சென்றாா்.
இவா்கள் சென்ற வேன் புதுச்சத்திரத்தை அடுத்த களங்காணி பகுதியில் சென்றபோது, திங்கள்கிழமை அதிகாலை மழை காரணமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநா் திருமலை (20) சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். கல்லூரி மாணவா் கோகுல் (19) நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.