வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவா் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினாா். இரு சக்கர வாகனத்தில் சென்ற இவா் மீது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் ராஜேந்திரனின் கால் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, இழப்பீடு கோரி அவா் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.7.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இருப்பினும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இதையடுத்து, அவா் தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் சோ்த்து ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்கவும், இல்லாதபட்சத்தில் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், இழப்பீடு வழங்காததால், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.