சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை
சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த கொண்டையம்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (20). கூலித் தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியுடன் பழகி அவரை கடந்தாண்டு திருமணம் செய்தாா். இதனிடையே, சிறுமி மாயமானதாக நத்தம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி சரண் தீா்ப்பளித்தாா்.