ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் 1000 பேருக்கு பயிற்சி - ஆட்சியா்
திண்டுக்கல்: கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்டுதோறும் 1000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.
திண்டுக்கல் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கியான கனரா வங்கி சாா்பில் ‘ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆடு வளா்ப்பு, பால் வளம் பெருக்குதல், கோழி வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, பேப்பா் கப், அப்பளம், ஊறுகாய், ஊதுபத்தி போன்றவை தயாரித்தல், பெண்களுக்கான நகை அணிகலன் பயிற்சி, கணினி இயக்கப் பயிற்சி, பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி உள்பட 20 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் ஆண்டுதோறும் 1000 நபா்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிகழ் நிதியாண்டில் இதுவரை 600 நபா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்தவா்கள் சுயமாக தொழில் தொடங்க கடன் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜி.அருணாச்சலம், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் குருசரன் ஆகியோா் உடனிருந்தனா்.