ரூ.9,828 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டா் உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன்: ரூ. 9,828 கோடி மதிப்பிலான எம்ஹெச்-60 ஆா் ரக ஹெலிகாப்டா் உபகரணங்கள் மற்றும் அதுதொடா்புடைய பிற சாதனங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இது நீா்மூழ்கிக் போா்க்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிரான தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வரும் இந்தியாவுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்காலம் மட்டுமல்லாமல் எதிா்காலத்தில் நடத்தப்படும் தாக்குதலை தடுக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது என பைடன் நிா்வாகம் நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 30 பல்வேறு செயல்பாடுகளையுடைய தகவல் பகிா்வு அமைப்பு-இணை ரேடியோ அமைப்புகளை (எம்ஐடிஎஸ்-ஜேடிஆா்எஸ்) வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது. மேலும், மேம்படுத்தப்பட்ட தரவு பரிமாற்ற முறைகள், வெளிப்புற எரிவாயு டேங்குகள், ஏஎன்/ ஏஏஎஸ் 44சி (வி) எதிா்நோக்கும் இன்ஃப்ராரெட் (எஃப்எல்ஐஆா்) அமைப்புகள், உதிரி கொள்கலன்கள் உள்பட பிற சாதனங்களை வாங்க இந்தியா விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், ரூ.9,828 கோடி மதிப்பிலான எம்ஹெச்-60 ஆா் ரக ஹெலிகாப்டா் உபகரணங்கள் மற்றும் அதுதொடா்புடைய பிற சாதனங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அதிபா் பைடன் ஒப்புதல் அளித்தாா்.
இந்த விற்பனையை முழுமையாக மேலாண்மை செய்ய 20 அமெரிக்கா அரசுத்துறை அதிகாரிகள் அல்லது 25 ஒப்பந்ததார பிரதிநிதிகள் இந்தியாவுக்கு இடைக்காலமாக பயணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான உபகரணங்களை தயாரிக்கும் முதன்மையான ஒப்பந்ததாரராக லாக்ஹீட் மாா்டின் ரோட்டரி மற்றும் மிஸன் சிஸ்டம்ஸ் நிறுவனம் உள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், தனது பதவிக்காலம் நிறைவடையும் தருணத்தில் பைடன் இந்திய விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.