தென் கொரியாவில் திடீர் அவசரநிலை: அதிபர் யூன் சுக் இயோல் அறிவிப்பு
சியோல்: தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார்.
நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாலும், வட கொரிய ஆதரவு சக்திகள் தலைதூக்குவதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இது குறித்து தொலைக்காட்சிஉரையில் அவர் கூறியதாவது:
எதிர்க்கட்சியினர் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். வட கொரியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் அவர்கள் எடுத்துவருகின்றனர்.
தேசத் துரோக நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சியினர் அரசை முடக்குகின்றனர். இதன் விளைவாக, நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த அவசரநிலை மூலம், நாட்டின் வட கொரிய ஆதரவு சக்திகளை ஒழித்துக்கட்டுவேன். எதிர்க்கட்சியிடமிருந்து நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயக மாண்பையும் காப்பாற்றுவேன்.
இந்த ராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி சுதந்திர தென் கொரியாவை மீண்டும் கட்டமைத்து, அதை பாதுகாப்பேன். இந்த நாடு தற்போது பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
தேசத் துரோக சக்திகளை எவ்வளவு விரைவில் அழிக்கமுடியுமோ அவ்வளவு விரைவில் அழித்த பிறகு, நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவேன் என்று அதிபர் யூன் சுக் இயோல் உறுதியளித்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 48.56 சதவீத வாக்குகள் பெற்று மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த யூன் சுக் இயோல் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லீ ஜே-மியுங்குக்கு 47.83 சதவீத வாக்குகள் கிடைத்தன. தென் கொரிய அதிபர் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் வெற்றி பெற்றது அதுவே முதல்முறை.
இது தவிர, நாட்டின் அதிபராக யூன் சுக் இயோல் பொறுப்பேற்றதற்கு முன்பிலிருந்தே நாடாளுமன்றத்தில் ஜனநயகக் கட்சியினரின் ஆதிக்கம் நிலவிவந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்கே பெரும்பான்மை கிடைத்தது.
இதனால், பல்வேறு விவகாரங்களில் அதிபருக்கும் நாடாளுமன்றத்தைக் கைவசம் வைத்திருக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அங்கு அரசியல் குழப்பம் நிலவிவந்தது.
இதற்கிடையே, யூன் சுக் இயோலுக்கு மக்கள் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துவருவது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தது. அவரை தகுதிநீக்கம் செய்வதற்கான மனுவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கையொப்பமிட்டனர்.
இந்தச் சூழலில்தான், அவர் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளார்.
சொந்தக் கட்சியே கண்டனம்: அதிபரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு அவரது மக்கள் சக்தி கட்சியிலிருந்தே கண்டனம் எழுந்துள்ளது. யூன் சுக் இயோலின் இந்த முடிவு மிகவும் தவறானது என்று விமர்சித்துள்ள அந்தக் கட்சியின் தலைவர் ஹன் டாங்-ஹூன், மக்களுடன் இணைந்து அதைத் தடுத்து நிறுத்தப்போவதாக சூளுரைத்தார்.
கடந்த 2022 அதிபர் தேர்தலில் யூன் சுக் இயோலுக்கு மிகக் கடுமையான போட்டியை அளித்த எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியூங், இந்த அவசரநிலை ராணுவச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டினார்.
உலகம் முழுவதும் ஜனநாயகத்தை வலியுறுத்திவரும் தென் கொரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, அதிபரின் இந்த ஜனநாயக விரோத அறிவிப்பு குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
அவசரநிலையை ரத்து செய்தது நாடாளுமன்றம்
அவசரநிலை ராணுவச் சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்த சில மணி நேரத்தில், அந்த பிரகடனத்தை ரத்து செய்து தென் கொரிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது பேசிய நாடாளுமன்ற அவைத் தலைவர் வூ வான்-ஷிக், மக்களுடன் இணைந்து நாட்டின் ஜனநாயகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பார்கள் என்று சூளுரைத்தார்.
தென் கொரிய சட்டத்தின் கீழ், ராணுவச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் ரத்து செய்ய முடியும். ஆனால், அவசரநிலை அறிவிப்பு வெளியான உடனேயே அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு ராணுவம் தற்காலிக தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. "சமூகக் குழப்பத்தை' தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ராணுவம் கூறியது.