முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை
பாங்காக்: கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவித்தது.
செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது.
தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, சீனாவுடனான வர்த்தகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது.
இந்தச் சூழலில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் கணினிகளுக்கான சிப்புகளைத் தயாரிக்கும் இயந்திரங்கள், மென்பொருள்கள், உயர்-அலைத்தொகுப்பு நினைவக சிப்புகள் ஆகியவற்றை அமெரிக்கா சேர்த்தது. இந்தப் பொருள்கள் உயர்தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.
சீன இறக்குமதி பொருள்களுக்கு கூடுதல் வரி வரி விதிக்கப்போவதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள சூழலில், பைடன் தலைமையிலான அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக சீன வர்த்தகத் துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.
அந்தப் பொருள்கள் சாதாரண பேட்டரி முதல் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுத தளவாடங்கள் வரை பல்வேறு பொருள்களின் தயாரிப்புக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.