தமிழக வெள்ள மீட்புப்பணி: காங்கிரஸாருக்கு ராகுல் வேண்டுகோள்
புது தில்லி: தமிழகத்தில் வெள்ள மீட்புப்பணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் உதவ வேண்டும் என்று அக்கட்சி எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஃபென்ஜால் புயலால் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் உள்ளிட்ட பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக நிகழ்வில் தங்கள் குடும்பத்தினரை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள், கால்நடைகள் உள்ளிட்ட சொத்துகளை இழந்து வாடுவோருக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.