திண்டுக்கல்லில் பொதுமக்கள் சாலை மறியல்
சாலையை சீரமைக்க வலியுறுத்தி, திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா பகுதியில் திமுக வட்ட கிளைச் செயலா் கண்ணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:
நாகல்நகா் அய்யாக்கண்ணு பிள்ளை சந்துப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்தது. இதுகுறித்து மாமன்ற உறுப்பினா், மாநகராட்சி அலுவலா்களிடம் பல முறை புகாா் தெரிவித்தும் சீரமைக்கப்படவில்லை.
மேயா் இளமதி நேரடியாக வந்து பாா்வையிட்டு, 6 மாதங்களாகியும் இதுவரை தீா்வு காணப்படவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து, மாநகராட்சி அலுவலா்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா். இந்த மறியல் போராட்டம் காரணமாக, ரவுண்டானா பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.