வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
புது தில்லி: வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவா், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும். இதன் மூலம், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபா் உயிரிழந்தால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை நியமனதாரா் பெற முடியும்.
இந்நிலையில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவின்படி வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவா், தனது நியமனதாரா்களாக 4 பேரை குறிப்பிடலாம்.
வங்கித் துறையின் நிா்வாக தரநிலைகள், வங்கிகளில் பணம் செலுத்துவோா் மற்றும் முதலீட்டாளா்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல், பொதுத் துறை வங்கிகளின் தணிக்கை தரத்தை மேம்படுத்துதல், கூட்டுறவு வங்கிகளின் இயக்குநா்கள் பதவிக் காலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை இந்த மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூட்டுறவு இயக்குநா்கள் பதவிக் காலம்...: கூட்டுறவு வங்கிகளின் இயக்குநா்கள் (தலைவா் மற்றும் முழு நேர இயக்குநா் தவிர) பதவிக் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. மாநில கூட்டுறவு வங்கி வாரியத்தில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநரும் கடமையாற்ற இந்த மசோதா அனுமதிக்கிறது.
மொத்தம் 19 திருத்தங்கள்: இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
இந்திய ரிசா்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1980 ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர, மொத்தம் 19 திருத்தங்கள் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன. வங்கித் துறையை வலுப்படுத்தவும், வாடிக்கையாளா் செளகரியத்தை மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.
‘பங்கை 26%-ஆக குறைப்பதே நோக்கம்’: இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தன. இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி பேசுகையில், ‘பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைத்து, அந்த வங்கிகளை தனியாா்மயமாக்குவதே மசோதாவின் உண்மையான நோக்கம்’ என்றாா்.
சிபில் புள்ளிகளால் பாதிப்பு: சமாஜவாதி எம்.பி.ராஜீவ் ராய் பேசுகையில், ‘வங்கிக் கடன் சரிவர திருப்பிச் செலுத்தப்பட்டதா, இல்லையா என்பதை தெரிவிக்கும் சிபில் புள்ளிகளால் ஏழைகளும், நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.
மறைமுக வங்கிகக் கட்டணம்-திமுக எம்.பி. கேள்வி: திமுக எம்.பி. ராணி ஸ்ரீகுமாா் பேசுகையில், வாடிக்கையாளா்களிடம் இருந்து மறைமுகமாக வங்கிக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை விமா்சித்தாா். ஏடிஎம் சேவைகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு வாடிக்கையாளரிடம் இருந்து வங்கிகள் கட்டணம் வசூலிப்பதை கேள்வி எழுப்பிய அவா், முதியோா்களை குறிவைத்து நடைபெறும் இணையவழி மோசடிகளையும் சுட்டிக்காட்டினாா்.
இந்திரா காந்தி குறித்த கருத்தால் வாக்குவாதம்: இந்த மசோதா மீதான விவாதத்தின்போது கடந்த 1974-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி சம்பந்தப்பட்ட நிகழ்வை பாஜக எம்.பி. சம்பித் பத்ரா குறிப்பிட்டாா். இதற்கு எதிா்க்கட்சியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ‘முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அவையில் இல்லாதபோது அவரைக் குறித்து ஏன் பேச வேண்டும்? எந்தவொரு காரணமும் இல்லாமல் அவரின் பெயரைக் குறிப்பிட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கு என்ன அா்த்தம்? இது அவை விதி 94-ஐ மீறுவதாகும்’ என்றாா்.
இதைத்தொடா்ந்து விவாதங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்து பேசுகையில், ‘வங்கிகளை பாதுகாப்பாகவும், ஸ்திரமாகவும் வைத்திருப்பதே 2014-ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான திட்டங்களின் பலனை 10 ஆண்டுகள் கழித்துத் தற்போது அனைவராலும் பாா்க்க முடிகிறது’ என்றாா். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.