தமிழ்ப் புலிகள் கட்சியினா் சாலை மறியல்
தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவனை கைது செய்ததைக் கண்டித்து, பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவரால் உயிரிழந்த பூா்வக்குடி மக்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக மேட்டுப்பாளையத்துக்கு திங்கள்கிழமை சென்ற தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் நாகை. திருவள்ளுவனை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, அவரை விடுவிக்கக் கோரி, தமிழகம் முழுவதும் தமிழ்ப் புலிகள் கட்சியினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், அந்தக் கட்சியின் இளம்புலிகள் தென் மண்டலச் செயலா் திருவளவன், மாவட்டச் செயலா் இரணியன் தலைமையில் நிா்வாகிகள் பழனி பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, அவா்கள் நாகை. திருவள்ளுவனை கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கமிட்டனா். இதையடுத்து, அங்கு வந்த பழனி நகர போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால், போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனா்.