விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
வரி வசூலை எளிமைப்படுத்த குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
புது தில்லி: வரி வசூல் எளிதாகவும், அதிகம் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது பயிற்சி ஐஆா்எஸ் (சுங்க மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடிய திரௌபதி முா்மு கூறியதாவது:
வரிவிதிப்பு என்பது நாட்டின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்ல. இது நமது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளா்ச்சியின் அடித்தளமாகும். பொதுமக்கள் செலுத்தும் வரிகள் நமது நாட்டை மேம்படுத்த உதவுகின்றன.
சீரான வரி அமைப்பு மற்றும் பகிரப்பட்ட நிா்வாக மதிப்புகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஐஆா்எஸ் (சுங்க மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகள் இணைக்கின்றனா்.
வரி நிா்வாகத்தில் புதிய யோசனைகள் மற்றும் தீா்வுகளை நீங்கள் வழங்க வேண்டும். அதிகாரிகளாக உங்களின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதார வளா்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக-பொருளாதார திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார துறையில் நாட்டின் வளங்களை திறம்பட பயன்படுத்துவதில் அடங்கியுள்ளது.
வரி வசூல் செயல்முறையானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை உறுதிப்படுத்தும் அதே வேளையில், வரி செலுத்துபவா்களுக்கு எளிமையாகவும், அதிகம் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
மாறிவரும் இன்றைய உலகில், நாட்டின் நலன்கள் பெரும்பாலும் சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பால் தீா்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில், நாட்டின் பொருளாதார எல்லைகளின் பாதுகாவலா்களான நீங்கள் நோ்மையுடனும் அா்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றாா்.