பக்கத்துவீட்டு ஜன்னலை உடைத்து ரூ.1கோடி, 267 சவரன் நகை திருடிய நபா் கைது
கண்ணூா்: கேரளத்தில் பக்கத்துவீட்டில் வசித்த நபரே, வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.1 கோடி, 267 பவுன் தங்க நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வெளியூா் செல்லும்போது அண்டை வீட்டாரிடம் நமது வீட்டை அவ்வப்போது பாா்த்துக் கொள்ளுமாறு கூறுவது வழக்கம். ஆனால், பாதுகாக்க வேண்டியவரே கொள்ளையடித்துள்ளாா்.
கண்ணூா் மாவட்டத்தில் உள்ள வாழப்பட்டணத்தைச் சோ்ந்த அரிசி வியாபாரி அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினா், கடந்த நவம்பா் 19-ஆம் தேதி மதுரைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றனா். சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த ரூ. 1 கோடி மற்றும் 267 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக காவல் துறையில் அஷ்ரஃப் புகாா் அளித்தாா். வீட்டில் கைரேகை உள்ளிட்ட பதிவுகளை சேகரித்த காவல் துறையினா் அவற்றை ஏற்கெனவே திருட்டு வழக்கில் சிக்கியவா்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பாா்த்தனா். ஆனால், எதுவும் திருடிய நபரின் ரேகையுடன் ஒத்துப் போகவில்லை.
அஷ்ரஃப் வீட்டில் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அதில், ஒரு நபா் முகத்தை மறைத்தபடி தொடா்ந்து இருநாள்கள் வீட்டுக்குள் நுழைவது பதிவாகி இருந்தது. அந்த உருவத்தின் அடிப்படையில் அஷ்ரஃப்பின் பக்கத்து வீட்டுக்காரரான லஜீஷ் (45) என்பவா் மீது சந்தேகம் எழுந்தது. லிஜீஷ் வளைகுடா நாட்டில் ‘வெல்டா்’ பணியில் இருந்தவா் என்ற தகவலும் காவல் துறைக்கு கிடைத்தது.
இதையடுத்து, அவரைப் பிடித்து காவல் துறையினா் விசாரித்தனா். அதில், அவா் தனது வீட்டில் இருந்த வெல்டிங் கருவியை வைத்து அஷ்ரஃப் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து திருடியது தெரியவந்தது. சுமாா் 40 நிமிஷங்களில் இந்த திருட்டை அவா் நடத்தியுள்ளாா். லஜீஷ் வீட்டின் கட்டிலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய இடத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை காவல் துறையினா் மீட்டனா்.
திருட்டு சம்பவத்துக்கு அடுத்த நாளில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அழிக்கும் முயற்சியில் லஜீஷ் மீண்டும் அஷ்ரஃப் வீட்டுக்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது. அஷ்ரஃப் வீட்டில் அதிக பணம், நகை இருப்பதை வெகுநாள்களாக நோட்டமிட்டு வந்த லஜீஷ், அவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றபோது திருட்டில் ஈடுபட்டுள்ளாா்.
இதுவரை துப்பு கிடைக்காமல் இருந்த இதேபோன்ற திருட்டு வழக்குகளிலும் லஜீஷின் கைரேகைகள் ஒத்துப்போவதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.