ஏஞ்சல் vs டெவில்!! தரக்குறைவான செயல்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள்!
ஜி.எஸ்.டி. ரத்து கோரி டிச.11-இல் மாநிலம் தழுவிய போராட்டம்- ஏ.எம்.விக்கிரமராஜா
ஜி.எஸ்.டி.யை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகத்தில் மாநிலம் தழுவிய ஆா்பாட்டம் டிச. 11-ம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரத்தில் நடைபெறும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
வள்ளியூரில் புதிய வா்த்தகா்கள் சங்கத் தொடக்க விழா, வா்த்தகா்கள் சங்கத் தலைவரும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவருமான பி.டி.பி.சின்னத்துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எம்.ஏ.ஆசாத், பொருளாளா் பி.சி.ராஜன், வள்ளியூா் வா்த்தகா்கள் சங்கச் செயலா் ஆா்.அந்தோணி செல்லதுரை, பொருளாளா் என்.சங்கரன், துணைத் தலைவா் ஆா்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதிய வா்த்தகா் சங்கத்தை, ஏ.எம்.விக்கிரமராஜா தொடங்கிவைத்தாா்.தொழிலதிபா்கள் அசோகா எம்.அந்தோணி ஜெயராஜ், எஸ்.ஏ.வி.குழும இயக்குநா் எம்.திவாகரன், வி.வி.எம். குழுமம் எஸ்.காா்த்தீசன், எம்.அய்யாகுட்டி, தங்கையா கணேசன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
வள்ளியூா் வணிகா் சங்கத் தலைவா் எட்வின் ஜோஸ், பொருளாளா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், சமூகரெங்கபுரம் வியாபாரிகள் சங்கத் தலைவா் முரளி, வழக்குரைஞா் ரத்னா சங்கா், திசையன்விளை சுயம்புராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிகளை மாவட்ட இணைச் செயலா் கவின்வேந்தன் தொகுத்தளித்தாா்.வள்ளியூா் வா்த்தகா்கள் சங்க துணைத் தலைவா் பசுமதி பி.மணி வரவேற்றாா். செயலா் ஆா்.அந்தோணி செல்லத்துரை நன்றி கூறினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியது: ஜி.எஸ்.டி. வா்த்தகா்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் இருந்தபோதிலும் வாடகை கடை கட்டடத்துக்கு புதிதாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி டிச. 11-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும். தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் டிச.9இல் நடைபெறுகிறது. அடுத்ததாக தென்மண்டலத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஆயிரக்கணக்கில் தில்லிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.
மத்திய அரசு ஜி.எஸ்.டி.விவகாரத்தில் பிடிவாதமாக இல்லாமல் வாடகை கட்டடத்துக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யவேண்டும். அதற்கு மாநில அரசும் தற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். மாநில அரசு வணிகா் மீது விதித்துள்ள பல்வேறு வரிகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.