சாலை விபத்தில் காயமடைந்த ஊா்க்காவல் படை காவலா் உயிரிழப்பு
ஆறுமுகனேரி - காயல்பட்டினம் புறவழிச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஊா்க் காவல் படை காவலா் உயரிழந்தாா்.
மெஞ்ஞானபுரம் வீரபாகு மகன் சதீஷ்குமாா் (47). இவா் ஆறுமுகனேரி பேயன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இரவுக் காவலராகவும், ஊா்க்காவல் படை காவலராகவும் பணியாற்றி வந்தாா்.
இவரது மனைவி அமுதலட்சுமி, சாத்தான்குளம் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றுகிறாா்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனது வயலுக்குச் சென்ற சதீஷ்குமாா், பின்னா் அங்கிருந்து காயல்பட்டினம் புறவழிச்சாலையில் திங்கள்கிழமை இரவு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த கிரேன் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இவ்விபத்து குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, கிரேன் ஓட்டுநா் முக்காணி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் இசக்கி ராஜா (40) என்பவரை கைது செய்தனா்.