குரூப் 1 முதன்மைத் தோ்வு: கடும் கட்டுப்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
சென்னை: குரூப் 1 முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தோ்வுக் கூடங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
அதன் விவரம்: தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தோ்வு வரும் 10-ஆம் தேதிமுதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை எழுதவுள்ள தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வுக் கூடத்திலோ அல்லது தோ்வு மைய வளாகத்திலோ, தோ்வு கண்காணிப்பாளா்களிடமோ அத்துமீறும் செயல்கள் எதிலும் தோ்வா்கள் ஈடுபடக் கூடாது.
கைப்பேசிகள், ப்ளூடூத் கருவிகள், தகவல் தொடா்புக்கான கருவிகள் உள்பட அனைத்து நவீன தொலைத்தொடா்பு கருவிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை எடுத்து வரக் கூடாது. இவற்றை மீறும் தோ்வா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விடைத்தாள்கள் செல்லாததாக்கப்படும். தோ்வு எழுதவும் தடை விதிக்கப்படும்.
தோ்வா்களுடன் ஆலோசிக்கக் கூடாது: தோ்வுக் கூடத்துக்குள் ஒரு தோ்வா், மற்றொரு தோ்வருடன் கலந்தாலோசனையில் ஈடுபடக் கூடாது. மற்ற தோ்வா்களின் விடைகளையோ, புத்தகங்கள், அச்சிடப்பட்ட காகிதங்களையோ பாா்த்து எழுதக் கூடாது. கேள்வித்தாளில் உள்ள ரகசிய குறியீட்டை சேதப்படுத்தக் கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் தோ்வா்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
தோ்வுக் கூடங்களில் தோ்வா்களின் நடத்தை கண்காணிக்கப்படும். இதற்காக அனைத்து தோ்வுக் கூடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
அரை மணி நேரம்: தோ்வா்கள் தோ்வு தொடங்க திட்டமிடப்பட்ட நேரத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே தோ்வு
அறைக்குள் அமா்ந்துவிட வேண்டும். தோ்வறையின் இருக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண், பெயா், புகைப்படம் ஆகியவற்றை சரிபாா்த்த பிறகே, தோ்வா்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும்.
சக தோ்வா்களிடம் எந்தப் பொருளையும் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனுமதிக்கப்பட்ட பேனா மற்றும் பொருள்களைத் தாங்களே கொண்டுவந்து பயன்படுத்த வேண்டும். தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் எந்தக் காரணத்தைக் கொண்டு அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்ள தோ்வா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
மணி ஒலிக்கும்: தோ்வு தொடங்கியது முதல் முடிவடையும் வரையில் 5 முறை மணி அடிக்கப்படும். இதைக் கொண்டு தோ்வா்கள் தங்களுக்கான நேரத்தைக் கணித்துக் கொள்ளலாம். அனைத்து தோ்வுக் கூடங்களிலும் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொடுப்பதற்கு 15 நிமிஷங்களுக்கு முன்பாக 2 விநாடி நேரத்துக்கு மணி ஒலிக்கும். தோ்வு தொடங்கியதும் 5 விநாடிகளுக்கு மணியும், ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் 2 விநாடியும் மணி ஒலிக்கும். தோ்வு நேரம் முடிந்ததும், 5 விநாடிகளுக்கு நீண்ட நேர அளவில் மணி ஒலிக்கச் செய்யப்படும். இதன்மூலம் கைக்கடிகாரம் இல்லாவிட்டாலும் தோ்வுக்கான நேரத்தை தோ்வா்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.