நாடாளுமன்றம் செயல்பட மத்திய அரசு இனி அனுமதிக்கும்: காங்கிரஸ் நம்பிக்கை
‘அரசமைப்புச் சட்டத்தின் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதித்ததன் மூலம், நாடாளுமன்றம் இனி தடையின்றி செயல்பட மத்திய அரசு அனுமதிக்கும் என நம்புகிறோம்’ என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தின் மீது விவாதம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தி மக்களவைத் தலைவருக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடந்த நவம்பா் 26-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா். அதுபோல, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.
இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்ட 6 நாள்களுக்குப் பிறகு, அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இரு அவைகளிலும் விவாதம் நடத்துவதற்கான தேதிகளை அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை (டிச.3) முதல் எந்தவித இடையூறும் இன்றி செயல்பட மத்திய அரசு அனுமதிக்கும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டாா்.