கழுத்தில் பதாகை, கையில் ஈட்டி: தண்டனையை ஏற்ற பொற்கோயில் முன்னாள் முதல்வர்
அமிருதசரஸ்: சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதல் தனக்கு அளிக்கப்பட்ட மதத் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
தனது தவறுகளுக்காக வருந்துவதாக எழுதப்பட்ட பதாகயை கழுத்தில் அணிந்துகொண்டு கையில் ஈட்டியை வைத்துகொண்டு பொற்கோவில் வாயிலில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால், சக்கர நாற்காலியில் வந்து பொற்கோவிலில் தண்டனையை ஏற்று சேவகராகப் பணியாற்றினார்.
சீக்கியர்களின் நம்பிக்கைபடி, தவறு செய்தவர்களுக்கு மத ரீதியாக வழங்கப்படும் தண்டனை சுக்பீர் சிங் பாதலுக்கு நேற்று பிறப்பிக்கப்பட்டது. சீக்கியா்களின் அதிகார பீடமான அகால் தக்த் திங்கள்கிழமை தண்டனை வழங்கிய நிலையில் அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக பஞ்சாபின் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில், சேவகராக தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதலுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
பஞ்சாப் முன்னாள் முதல்வா் சுக்பீா் சிங் பாதல், அண்மையில் எஸ்ஏடி கட்சியின் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். இந்நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை, பஞ்சாபில் எஸ்ஏடி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற சீக்கிய மதத்துக்கு எதிரான தவறுகளுக்காக சுக்பீா் சிங் பாதலுக்கு அகால் தக்த் தலைவா் கியானி ரக்பீா் சிங் திங்கள்கிழமை மத ரீதியாக தண்டனை விதித்திருந்தார்.
இதன்படி அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக காலணிகளையும், பாத்திரங்களையும் சுக்பீா் சிங் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும், சுக்பீா் சிங் பாதலின் தந்தையுமான மறைந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்ட ‘ஃபக்ரே-ஏ-கெளம்’ பட்டமும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.