பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ராகுலுக்கு உரிமை உள்ளது: பிரியங்கா காந்தி
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்திக்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அரசியல் சாசன உரிமை உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மசூதி ஆய்வு செய்யப்பட்டபோது மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
இதையும் படிக்க | தில்லி எல்லையில் ராகுல் கார் தடுத்து நிறுத்தம்!!
அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.
மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பதற்றத்தை தனிக்கும் வகையில் அரசியல் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் உள்பட வெளிஆள்கள் நுழைய சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சம்பல் பகுதியை பார்வையிடச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காஸிப்பூர் எல்லையில் சம்பல் ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, ராகுல், பிரியங்கா பயணித்த கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில்,
'சம்பலில் என்ன நடந்தாலும் அது தவறு. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர். அவர் அப்பகுதியைப் பார்வையிட அரசியலமைப்பு உரிமை உள்ளது. அவர் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க உரிமை உள்ளது. உத்தர பிரதேச காவல்துறையினருடன் ராகுல் காந்தி தனியாகச் செல்லவும் தயாராக இருக்கிறார். ஆனாலும் காவல்துறை அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்று ஏன் இப்படி திமிராக நடந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை' என்று பேசினார்.