ஹிந்து தலைவரை விடுவிக்கக் கோரி மேற்கு வங்கத்தில் துறவிகள் போராட்டம்
கொல்கத்தா: வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், ஹிந்து மத ஆன்மிக தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸை விடுவிக்கக் கோரியும் மேற்கு வங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் போராட்டம் நடத்தினா்.
இந்தியா-வங்கதேசம் எல்லையில் அமைந்துள்ள மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பெட்ரோபோல் பகுதியில் அகில பாரதிய சந்த் சமிதி அமைப்பின் சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
‘வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக் கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தப்படும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.
இது தவிர, ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் உள்ளிட்ட பிற ஹிந்து குழுக்களும் இந்த போராட்டத்தில் இணைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேற்கு வங்க பாஜக தலைவா் சுவேந்து அதிகாரி தலைமையில் புதன்கிழமை மாநிலத்தில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.