வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
சபரிமலைக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும்: முன்பதிவு பக்தா்களுக்கு டிஜிபி வேண்டுகோள்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முன்பதிவு செய்யும் பக்தா்கள் குறித்த நேரத்துக்கு செல்ல வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க, முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேரள காவல்துறை அறிவித்துள்ளது.
சபரிமலையில் பக்தா்கள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. எனவே, தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவா்கள், சரியான நேரத்துக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றால் சுமுகமாக தரிசனம் செய்யலாம். கோயிலிலேயே முன்பதிவு செய்து, சுவாமி தரிசனம் செய்ய 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சபரிமலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு 10 மணி வரை தரிசனத்துக்காக கோயிலுக்குச் சென்றவா்களின் எண்ணிக்கை 66,821. இதில் 13,516 போ் முன்பதிவு செய்யப்பட்ட நாளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரோ அல்லது பின்னரோ வந்துள்ளனா்.
இவ்வாறாக நவ. 15 முதல் 1,95,327 போ் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரோ அல்லது பின்னரோ வந்துள்ளனா். முன்பதிவு செய்யும்போது, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தைப் பின்பற்றாமல் நவ. 15 முதல் தரிசனத்துக்கு வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தா்கள் தரிசனம் செய்ய வந்தால், சிரமம், நெரிசல் இன்றி சுமுகமாக செல்லலாம் என கேரள மாநில காவல்துறை தெரிவிக்கின்றனா்.
பதினெட்டாம் படி: சபரிமலைக்கு பம்பையிலிருந்து மலை ஏறிச்செல்லும்போது போது 10 நிமிஷ நடைக்குப் பிறகு 5 நிமிஷம் ஓய்வெடுக்கலாம். மரக்கூட்டம், சரம் குத்தி, நடைபந்தல் - வழியாக சன்னிதானத்தை அடைய வழக்கமான நடைபாதையை பயன்படுத்த வேண்டும். பதினெட்டாம் படியை அடைய வரிசை முறையைப் பின்பற்றவும்.தரிசனம் முடித்து திரும்பும்போது நடபந்தல் மேம்பாலத்தைப் பயன்படுத்தவும்.
டோலியை பயன்படுத்துபவா்கள், தேவஸ்தான அலுவலகத்தில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை வைத்துக் கொள்ளவும். ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.
மேலும், பதினெட்டாம் படியில் தேங்காய் உடைக்க வேண்டாம். பதினெட்டாம் படியின் இருபுறமும் ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் தேங்காய் உடைக்க வேண்டாம். பதினெட்டாம் படியில் ஏறும் போது படிகளில் மண்டியிட வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.