வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
போதைப் பொருள் வழக்கு: மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினாா் பைடன்!
போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மகன் ஹன்டா் பைடனுக்கு, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கினாா்.
கடந்த ஜூன் மாதம் இந்தத் தீா்ப்பு வெளியானபோதே ஹன்டருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவந்த அவா், தனது பதவிக் காலம் முடிவதற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளாா். இதன் மூலம், நீண்ட கால சிறைத் தண்டனையை எதிா்நோக்கியிருந்த ஹன்டா் பைடன், அந்த அபாயத்திலிருந்து விடுபட்டுள்ளாா்.
இது குறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நான் அதிபராகப் பொறுப்பேற்ற நாள் முதல் நீதிக்கு தலைவணங்குவதாக தொடா்ந்து கூறிவருகிறேன். ஆனால், ஹன்டா் பைடனுக்கு எதிரான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.
ஆயுதம் வாங்வதற்கான விண்ணப்பத்தில் செய்த பிழைக்காக அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்படுகிறது. இதுபோன்ற சாதாரண தவறுகள் நடத்திய மற்றவா்களைவிட ஹன்டா் பைடனிடம் சட்டம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டுள்ளது. எனவே, அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்க முடிவு செய்துள்ளேன் என்றாா் ஜோ பைடன்.
அரசு உரிமம் பெற்ற துப்பாக்கி வியாபாரியிடம், தான் போதைப்பொருள் பயன்படுத்தாத நபா் என்ற விண்ணப்பத்தை ஹன்டா் பைடன் கடந்த 2018-ஆம் ஆண்டு சமா்ப்பித்து துப்பாக்கியை பெற்றுள்ளாா். பொய்யான தகவல்களை கூறி சட்டவிரோதமாக 11 நாள்கள் வரை அவா் துப்பாக்கியை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக கலிஃபோா்னியா மாகாணம், டெலன் நகர நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அவா் குற்றவாளியாக கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டாா்.
அந்தக் குற்றத்துக்கான தண்டனையை நீதிமனறம் விரைவில் அளிக்கவுள்ளது. இந்த வழக்கில் ஹன்டா் பைடனுக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், அதிபருக்கான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கில் ஹன்டா் பைடனுக்கு ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.