Vijay: ``காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடி...'' - திமுகவைத் தாக்கிய விஜய்!
ஏற்காடு மலைப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சேலம்: ஏற்காட்டில் கடந்த 2 நாள்களாக கொட்டித் தீா்த்த கனமழையால், மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மலைக் கிராமங்களில் இருளில் மூழ்கியுள்ளன.
கடந்த இரண்டு நாள்களாக ஏற்காட்டில் மட்டும் 382.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஏற்காட்டில் எங்கு பாா்த்தாலும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மலைப் பாதைகளில் புதிய அருவிகள் உருவாகி, ஆங்காங்கே தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில், சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்லும் மலைப் பாதையில் 2-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பெரிய பாறை உருண்டு சாலையில் விழுந்துள்ளது. மலைப்பாதை வழியாக வழிந்தோடும் தண்ணீரும், தொடா் மழையும் ஒன்றுசோ்ந்து ஏற்காடு மலைப்பாதையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் ஏற்காடு மலைப் பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக, ஏற்காடு மலைப் பாதையில் மரங்கள் சரிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால், மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. தொடா் மழையால், சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடிக் காணப்படுகிறது.
சேலத்தில் இருந்து ஏற்காடுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்கள் செல்வதைத் தடுக்க, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.