சூது கவ்வும் 2: ``வத்த குழம்பு தான் நான் வாங்கின Payment...'' - தயாரிப்பாளரை கலாய்த்த சிவா!
2013ம் ஆண்டு நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், ஷில்பா ஷெட்டி நடித்து வெளியான திரைப்படம் சூதுகவ்வும்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இதன் ஆடியோ லான்ச் நடைபெற்றது. மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய நாயகன் மிர்ச்சி சிவா, தயாரிப்பாளர் சி.வி.குமார் குறித்து கலகலப்பாக பேசினார்.
"சி.வி.குமாரும் அர்ஜுனும் வந்து சூது கவ்வும் 2 பண்ணலாம்ன்னு சொன்னபோது, 'இது நல்ல படம் சார், நாம பண்ணி சொதப்ப வேண்டாம்'னு சொன்னேன். அவங்க இது நலனே (முதல் பாக இயக்குநர் நலன் குமாரசாமி) சொன்ன ஒரு லைன்னு சொன்னாங்க. ஆனா இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சிது நலனுக்கு பார்ட் ஒன்னே மறந்துட்டு அப்படின்னு. இப்படி தான் என்னை ஏமாத்திட்டாங்க பிரதர் (நலன் குமாரசாமியை பார்த்து சொல்கிறார்) ...
இந்த படம் நலன் இல்லாமல் பண்ணலாம், விஜய் சேதுபதி இல்லாம பண்ணலாம், ஆனா அருமை பிரகாசம் இல்லாமல் பண்ண முடியாது சொன்னாங்க. அமைதியா இருந்துட்டே எல்லா சேட்டையும் செய்ற கேரக்டர், ரியல் லைஃப்யும் கருணாகரன் அப்படித்தான் (கூட்டத்தில் சிரிப்பலை).
சி.வி.குமார் நம் இண்டஸ்ட்ரிக்கு ஒரு சொத்து. பல திறமையாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் பெரிய யூனிவர்சிட்டின்னு சொல்லுவாங்க. யூனிவர்சிட்டின்னா கொஞ்சம் டேமேஜாதான் இருக்கும். வசதிகள் குறைவாகத்தான் இருக்கும். முதலில் இங்க வந்து படிக்கணுமான்னு தோனும். ஆனால் மாணவர்கள் நல்ல அறிவோடு வெளியே சொல்வார்கள். அப்படிப்பட்ட பல்கலைக்கழகம் அவர்.
இப்படிப்பட்ட சி.வி.குமார் ஒரு மேடையில் கண்கலங்குவதைப் பார்த்தேன். இவர் நிச்சயம் சினிமாவில் இருக்க வேண்டும். இன்னும் 10 வருடம் கழித்து, இப்போது நாம் பார்ப்பது போல இன்னும் பலரை அறிமுகப்படுத்தியிருப்பார் அவர். இதெல்லாம் எதுக்கு சொல்றென்னு தெரியும்ல, அந்த செக்கை மறந்துடாதீங்க (எல்லோரும் சிரித்தனர்)
அடுத்ததாக தயாரிப்பாளர் தங்கராஜ் குறித்து பேசும்போது, அவர் ஹோட்டல் வைத்திருப்பதைக் குறிப்பிட்ட சிவா, தனக்கு ஒவ்வொரு ஷெடுலுக்கும் பணம் வரவில்லை என்றும் விதவிதமாக சாப்பாடு மட்டும் வந்ததாகவும் ஜாலியாக கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
"இந்த படத்துக்கு நான் வாங்கின பேமெட் வத்த குழம்பு... சும்மா ஜாலிக்கு சொன்னேன் சார், ஆனா அந்த பேமண்ட்டை மறந்துடாதீங்க. ஓடிடி, சேட்டலைட் எல்லாம் பேசிட்டு தரதா சொல்லிருக்காங்க" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...