Good Bad Ugly: ``அவர் `குட் பேட் அக்லி' படத்துல ஒரு முக்கியமான பங்கு வகிச்சிருக்கார்!'' - ஆதிக்
`சூது கவ்வும் 2' திரைப்படம் டிசம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தில் திரைப்படங்கள் இயக்கிய பா. இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாராசாமி, ரவிக்குமார் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், `` சூது கவ்வும் படத்தின் முதல் பாகம் ஒரு மாஸ்டர்பீஸ் திரைப்படம். இப்பவும் ஞாபகம் இருக்கு. அந்தப் படத்தை நான் உதயம் தியேட்டர்ல பார்த்தேன். நலன் குமாராசாமி முதல் பாகத்தை பண்ணலைனா இன்னைக்கு இரண்டாம் பாகம் வந்திருக்காது. இந்த படத்தோட இயக்குநர் அர்ஜூனோட நட்பு எனக்கு பிரபுதேவா சார்கிட்ட இருந்துதான் கிடைச்சது. அர்ஜுன் `மார்க் ஆண்டனி' திரைப்படத்தோட எழுத்துப் பணிகள்ல ஒரு முக்கியமான நபராக இருந்தாரு. அந்தப் படத்தோட வெற்றி எனக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அர்ஜூனுக்கும் முக்கியம். அதே போல அவர் `குட் பேட் அக்லி' திரைப்படத்திலையும் ஒரு முக்கியமான நபராக எழுத்துப் பணிகளில் வேலை செய்திருக்கார்." எனப் பேசினார்.
இவரை தொடர்ந்து மேடையில் வந்துப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், `` எனக்கு தயாரிப்பாளர் சி.வி.குமார் ஃபேஸ்புக் மூலமாகதான் அறிமுகமானார். எனக்கு தயாரிப்பாளர்களிடம் நன்றாக கதை சொல்றதுக்கு வராது. அந்த விஷயத்துல நான் தனித்தன்மை வாய்ந்தவன் அல்ல. அதுனால பல தயாரிப்பாளர்களை சந்திச்சு திரும்ப வந்திருக்கேன். நமக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கமாட்டாங்கனுதான் நினைச்சேன். அதன் பிறகு புதியதாக இந்த தயாரிப்பாளர் வந்திருக்கார்னு தெரிஞ்சுகிட்டு அவருக்கு ஃபேஸ்புக்ல மெசேஜ் பண்ணினேன். அப்புறம் அவரோட அலுவலகத்துக்குப் போய் ஸ்கிரிப்ட் கொடுத்துட்டு, `எனக்கு கதை சொல்றதுக்கு வராது'னு சொன்னேன். அவர், `டீ குடிச்சிட்டு வாங்க ... நான் படிச்சிடுவேன்'னு சொன்னார்.
அதே மாதிரி ஒரு மணி நேரத்துல படிச்சிட்டு இந்தக் கதையை படமாக பண்ணலாம்னு சொன்னார். ஜிகிர்தண்டா கதையைதான் என்னுடைய முதல் படமாக பண்ணலாம்னு திட்டமிட்டேன். அவரும் இந்த கதையை உங்க முதல் படமாக பண்ண முடியாதுனு சொன்னார். இயக்குநர் நலன் குமாராசாமிதான் ஃபாதர் ஆஃப் டார் ஹியூமர். சில கிளாசிக் திரைப்படங்களைதான் மீண்டும் மீண்டும் பார்க்க தோணும். அப்படியான படம் `சூது கவ்வும்'. இப்போ சமீபத்துல அந்த திரைப்படம் ஓடிட்டு இருந்தது. அந்த நேரத்துல உட்கார்ந்து முழுமையாக பார்த்து முடிச்சிட்டேன். இப்போ இரண்டாம் பாகம் வருது. இதுல சிவா நடிச்சிருக்கார். அவருடைய சாந்தமான காமெடி எனக்கு பிடிக்கும்." எனப் பேசினார்.
நலன் குமாராசாமி பேசுகையில், `` சூது கவ்வும் படத்தை 47 நாள்கள்ல ஷூட் பண்ணி முடிச்சிட்டேன். அந்த ஷூட்ல என்னென்ன விஷயங்கள் நடந்ததுனு எதுவுமே நினைவுல இல்ல. அந்தளவுக்கு வைலட் ரைட்டாக இருந்தது அந்த திரைப்படம். சி.வி. குமார் ஸ்கிரிப்ட் படிக்ககூடிய ஒரு தயாரிப்பாளர். அப்படி படிச்சு அந்த கதையை மட்டுமல்ல அந்த இயக்குநரையும் ஜட்ஜ் பண்ணுவார். (சிரித்துக் கொண்டே...) இப்போ நான் சூது கவ்வும் படத்தை பார்த்தால் ...' நல்லா படத்தை பண்ணியிருக்காங்க'னு சொல்ற மனநிலைக்கு வந்துட்டேன். நான் இந்த பாகத்தை பண்ணியிருந்தால் எதாவது வித்தியாசமாக பண்றேன்னு மாட்டியிருப்பேன். வேற டீம் இந்தப் படத்தை பண்ணினது ரொம்பவே நல்லது. இந்த கதையில டீம் அதிக நாள்கள் உழைச்சிருக்காங்க." என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...