Railway union election: `என் நிர்வாகிகள் தவறாக நடந்திருந்தால் மறந்துடுங்க!' - SRMU கண்ணையா
ரயில்வேயில் தொழிற்சங்கங்கங்களை அங்கீகரிப்பதற்கான தேர்தல் நாடு முழுக்க இன்றும் நாளையும் நடக்கிறது.
ஆறு வருடத்துக்கொரு முறை நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் 2019-லேயே நடந்திருக்க வேண்டியது. ரயில்வே நிர்வாகம் பல காரணங்களைச் சொல்லி இழுத்தடிக்க ’தட்ஷிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன்’ (SRMU) என்கிற அமைப்பு வழக்கு தொடர்ந்ததன் விளைவாக இப்போது தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் யூனியன்களுடன் மட்டுமே ஊழியர்களின் எந்தவொரு பிரச்னை குறித்தும் ரயில்வே நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்துமென்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ரயில்வேயில் மட்டும் சுமார் 76000 பேர் (குரூப் சி மற்றும் டி ஊழியர்கள்) வாக்களிக்கும் உரிமை பெற்றிருக்கிற இந்தத் தேர்தல் குறித்து தட்ஷிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியனின் முன்னாள் உதவித் தலைவர் இளங்கோவனிடம் பேசினோம்,
‘’எங்களோடது தெற்கு ரயில்வே யூனியன். ஆனா இன்னைக்கு எங்களாலதான் இந்தியா முழுக்கவே இந்தத் தேர்தல் நடக்குது.
தெற்கு ரயில்வேயில எஸ்.ஆர்.எம்.யூ, டி.ஆர்.இ/யூ. ஆர்.எம்.யூ உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இந்தத் தேர்தல்ல போட்டியிடுது. காங்கிரஸ் ஆதரவு பெற்ற. பா.ஜ.க. ஆதரவு பெற்ற சங்கங்களுக்கெல்லாம் இங்க செல்வாக்கு கம்மிதான்.
கம்யூனிஸ்டுகள் ஆதரவு பெற்ற டி.ஆர்.இ.யூ.வுக்கும் கண்ணையாவுடைய சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனுக்கும்தான் பெரிய போட்டி நிலவுது.
மஸ்தூர் யூனியனைப் பொறுத்தவரை வெளிப்படையா திமுக ஆதரவு நிலைப்பாடு உடையவங்க. தவிர உறுப்பினர்களுக்கு ஓட்டுக்கு பிரியாணி. காசுன்னு இறைச்சு விடுறாங்கனு தெரிய வருது.
ஆனாலுமே அவங்களூக்கு முன்ன இருந்த பேர் இப்ப கிடையாது. ஊழியர்களின் புரொமோஷன், பணியிட மாறுதலுக்கு காசு வாங்குறாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இவங்க மேல இருக்கு. தவிர ரயில்வேயில ஊழியர்களின் எத்தனையோ பிரச்னைகளுக்குத் தீர்வு காண எந்தவொரு முயற்சியும் இவங்க எடுக்கலை. டிரைவர்களுடைய 8 மணி நேர வேலை கோரிக்கையையே இவங்களால வாங்கித் தர முடியலை’’ என்கிறார் இவர்.
எஸ்.ஆர்.எம்.யூ.வின் கண்ணையா இந்தத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில் தன்னுடைய நிர்வாகிகள் சிலர் ஊழியர்களிடம் வேறு மாதிரியாக நடந்து கொண்டிருந்தாலும் அதை மறந்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டிருப்பதும் அவரது யூனியனுக்குப் பின்னடைவாகவாகவே கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்தலின் முடிவுகள் வரும் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது.