நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
South Korea: `நேற்று ராணுவ ஆட்சி அமல்... இன்று வாபஸ்' - என்ன நடக்கிறது தென் கொரியாவில்?!
'இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், ரஷ்ய - உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி... என ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் உலக அரசியல் களத்தை இன்னும் பரப்பாக்கியது, தென் கொரியாவின் 'ராணுவ ஆட்சி அமல்' அறிவிப்பு.
நேற்று இரவு தொலைக்காட்சி திரையில் தோன்றிய தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல், "எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், தென் கொரியா மீண்டும் சரியாக கட்டமைத்து பாதுகாக்க உள்ளேன். இதன் மூலம், நாட்டுக்கு எதிராக இருப்பவர்கள் சீக்கிரம் அழிக்கப்பட்டு, மீண்டும் தென் கொரியா பழைய நிலைக்கு கொண்டு வரப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் என அனைவரும் வெகுண்டு எழ, தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சி அறிவிப்புக்கு என்ன காரணம்?
2022-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஒரு சதவிகிதத்திற்கு கீழான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பீப்பள் பவர் கட்சியை சேர்ந்த யூன் சுக் இயோல். இவர் பதவி ஏற்றதில் இருந்தே அவர் போட்ட சட்டங்கள், அவர் எடுத்த முடிவுகளால் இயோல் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரியாவில் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. அப்போது தொடங்கியது இயோலுக்கு பிரச்னை.
அதிபர் ஒரு கட்சியை சேர்ந்தவர், உறுப்பினர்கள் இன்னொரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் இயோல் கொண்டு வரும் பெரும்பாலான சட்டங்களுக்கு உறுப்பினர்களிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இது இயோலுக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது.
சமீபத்தில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை இயோல் கொண்டுவந்தபோது, இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எதிர்க்கட்சி தரப்பில் இருந்து வந்தது. அது தான் நேற்று அறிவிக்கப்பட்ட ராணுவ ஆட்சிக்கு முக்கிய காரணம்.
அதிபர் மீது தேசத் துரோக மசோதாவா?
இயோல் இந்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இயோலை பதவி விலகச் சொல்லி ஜனநாயக கட்சியினர் கூறினர். மேலும் அவர் மீது தேசத் துரோக மசோதா ஒன்றும் கொண்டு வரப்பட்டது. "ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டாலும், அவர் மீது கூறப்பட்டுள்ள தேசத்துரோக புகாரை அவரால் மறுக்க முடியாது. இப்போது நீங்கள் எடுத்துள்ள முடிவால் உங்களால் நாட்டை சரியாக ஆட்சி செய்ய முடியாது என்று தெரிகிறது. அதனால் பதவியை விட்டு விலகுங்கள்" என்று எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர்.
எதிர்க்கட்சி எதிர்ப்பு மட்டுமல்லாமல் போராட்டம், கடைகள் மூடல், தென் கொரியா பங்குச்சந்தை வீழ்ச்சி என நாடு முழுவதும் பல அதிரடி மாற்றங்கள் இயோலின் முடிவையொட்டி நடந்துள்ளது. இப்படி பரவலான அதிருப்தி எழுந்ததனால், இன்று காலை இயோல் ராணுவ ஆட்சி அறிவிப்பை திரும்ப பெற்றுவிட்டார்.
இருந்தும் இவர் மீதான மக்கள் கோபம் இன்னும் அடங்கவில்லை. அடுத்து தென் கொரியாவில் என்ன அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.