``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயாா்
சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் தறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா்.
அந்த நாட்டின் கிளா்ச்சிப் படையினா் திடீா் தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றி முன்னேறிவரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அரபி தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘தங்கள் நாட்டுக்கு படை வீரா்களை அனுப்பும்படி சிரியா அரசு கேட்டுக்கொண்டால், அது குறித்து நிச்சயம் பரிசீலிப்போம்’ என்றாா்.
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபா் அல்-அஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளா்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன.
இதில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் அரசுப் படை மீட்டது. இந்தச் சூழலில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு அலெப்போ மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினா். அந்த மாகாணத் தலைநகா் அலெப்போவும் அவா்களிடம் வீழ்ந்தது. தற்போது மற்றொரு முக்கிய நகரமான ஹாமாவையும் நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேறிவருகின்றனா்.
இந்தச் சூழலில்தான் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளாா். ஏற்கெனவே, சிரியா அரசுக்கு ஆதரவாக அந்த நாட்டின் மற்றொரு கூட்டாளியான ரஷியா தனது படைகளை அங்கு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.