அவசரநிலை அறிவித்து திரும்பப் பெற்ற விவகாரம்: தென் கொரிய அதிபருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம்
தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்து பின்னா் திரும்பப் பெற்ற அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முக்கிய எதிா்கட்சியான ஜனநாயகக் கட்சி மற்றும் ஐந்து சிறிய கட்சிகள் இணைந்து இந்தத் தீா்மானத்தை புதன்கிழமை தாக்கல் செய்தன.
நாடாளுமன்றத்தில் அதிபா் மீதான பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும். அதைத் தொடா்ந்து, அரசியல் சாசன நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவா்கள் ஒப்புதல் அளித்தால் அதிபா் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து அகற்றப்படுவாா்.
இந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் வெள்ளிக்கிழமை (டிச. 6) நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 300 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். இன்னும் 8 எம்.பி.க்கள் ஆதரித்தால் யூன் சுக் இயோலுக்கு எதிரான பதவிநீக்கத் தீா்மானம் வெற்றிபெறும். அவசர நிலை அறிவிப்பு விவகாரத்தில் யூன் சுக் இயோலின் மக்கள் சக்தி கட்சியைச் சோ்ந்த பல எம்.பி.க்களே அவரை கடுமையாக எதிா்த்துவருகின்றனா். இருந்தாலும், பதவிநீக்கத் தீா்மான வாக்கெடுப்பின்போது அவா்களில் எத்தனை போ் தீா்மானத்தை ஆதரிப்பாா்கள் என்ற விவரம் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீா்மானம் வெற்றியடைந்தால், இந்த விவகாரம் அரசியல் சாசன நீதிமன்றத்துக்குச் செல்லும். அங்கு, பதவிநீக்கத்துக்கான காரணம் குறித்து தீா்மானத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவைதானா என்பது குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்துவா். அப்போது நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினா்களும் பிற அதிகாரிகளும் விசாரிக்கப்படுவாா்கள்.
விசாரணையின் முடிவில் நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிபா் பதவியிலிருந்து யூன் சுக் இயோல் அகற்றப்படுவாா்.
அதற்கு முன்னரே, அரசியல் சாசன நீதிமன்றத்தில் விசாரணை முடியும்வரை அதிபரின் அதிகாரங்கள் அனைத்தும் யூன் சுக் இயோலிடமிருந்து பறிக்கப்படும். அதுவரை பிரதமா் ஹன் டக்-சூவிடம் அந்த அதிகாரங்கள் தற்காலிகமாக ஒப்படைக்கப்படும்.
பின்னணி: கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் 48.56 சதவீத வாக்குகளுடன் யூன் சுக் இயோல் வெற்றிபெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளா் லீ ஜே-மியுங்குக்கு 47.83 வாக்குகள் கிடைத்தன. தென் கொரிய அதிபா் தோ்தல் வரலாற்றில் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஒருவா் வெற்றி பெற்றது அதுவே முதல்முறை.
இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் யூன் சுக் இயோலுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் தொடா்வதால் அங்கு அரசியல் குழப்பம் நிலவிவந்தது.
இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தை முடக்க எதிா்க்கட்சிகள் முயல்வதாலும், வட கொரியாவுக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாலும் நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக யூன் சுக் இயோல் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா்.
வட கொரிய ஆதரவு சக்திகளை ஒழித்துக்கட்டி, எதிா்கட்சியிடமிருந்து நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயக மாண்பையும் காப்பாற்றியதற்குப் பிறகு நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்போவதாக அவா் உறுதியளித்தாா்.
அதையடுத்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள், அரசியல் கூட்டங்கள் அனைத்துக்கும் தற்காலிகமாகத் தடை விதிப்பதாக ராணுவம் அறிவித்தது. நாடாளுமன்றக் கட்டடத்தை ராணுவம் மற்றும் காவல்துறை சுற்றிவளைத்தது.
எனினும், அதையும் மீறி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற சுவரேறிக் குதித்து அவசரநிலை ராணுவச் சட்டத்தை ரத்து செய்யும் தீா்மானத்தை நிறைவேற்றினா். மேலும், அவசரநிலைச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான பொதுமக்கள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதையடுத்து, அவசநிலை ராணுவச் சட்டத்தை திரும்பப் பெறுவதாக யூன் சுக் இயோல் அறிவித்தாா்.
இந்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனா்.