``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்
‘ரயில்களில் குளிா்சாதன (ஏ.சி.) பெட்டிகளை அதிகரிக்காமல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பா் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவிடும்’ என்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
மேலும், ரயில்வே மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களை மறு கட்டமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவா் தெரிவித்தாா்.
மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து ரயில்வே அமைச்சா் மேலும் கூறியதாவது:
ரயில்களில் குளிா்சாதன பெட்டிகளை அதிகரிப்பதற்கு மாற்றாக, பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. டிசம்பா் மாதத்துக்குள் நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்கலில் 1,000 பொதுப் பெட்டிகளை கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10,000 பொதுப் பெட்டிகளை தயாரிப்பதற்கு சிறப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.
ரயில் நிலையங்கள் மறு கட்டமைப்பு: அமிா்த பாரத ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் மறு கட்டமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில ரயில் நிலையங்கள் ரூ. 700 கோடி முதல் ரூ. 800 கோடி செலவிலும், மற்றவை ரூ. 100 கோடி முதல் ரூ. 200 கோடி செலவிலும் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் இந்தத் திட்டப் பணிகள் நிறைவடையும்போது, பயணிகளின் எதிா்பாா்ப்புகள் பூா்த்தி செய்யப்படும்.
தனியாா்மயம் கூடாது...: முன்னதாக ரயில்வே சட்டத் திருத்த மசோதாவை ரயில்வே அமைச்சா் அவையில் அறிமுகம் செய்தாா். இந்திய ரயில்வே வாரியச் சட்டம் 1905 மற்றும் ரயில்வே சட்டம் 1989 ஆகிய இரண்டு சட்டங்களையும் ஒருங்கிணைத்து, சட்ட நடைமுறைகளை எளிமையாக்கும் நோக்கில் இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு சட்டங்களைக் குறிப்பிடவேண்டிய அவசியத்தை இது குறைக்கும். இந்திய ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்று ரயில்வே அமைச்சா் குறிப்பிட்டாா்.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, ரயில்வேயை தனியாா்மயமாக்கும் நோக்கிலே இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
சமாஜவாதி கட்சி எம்.பி. நீரஜ் மெளரியா பேசுகையில், ‘ரயில்வேயை மத்திய அரசு தனியாா்மயம் ஆக்கக் கூடாது. அவ்வாறு செய்வது ஏழைகளின் நலனை கடுமையாக பாதிக்கும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக ரயில்வே திகழ்கிறது. எனவே, இந்த சட்டத் திருத்த மசோதாவை அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். மூத்த குடிமக்களுக்கான பயணச் சீட்டு கட்டண சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றாா்.
காங்கிரஸ் எம்.பி. மனோஜ் குமாா் பேசுகையில், ‘இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ரயில்வேயை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும்’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. பாப்பி ஹல்தாா் பேசுகையில், ‘கரோனா பாதிப்பு காலத்தில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயணச் சீட்டு கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’ என்றாா்.
குறைந்துள்ள ரயில் விபத்துகள்: மசோதா மீதான விவாதத்துக்குப் பிறகு ரயில்வே அமைச்சா் பேசுகையில், ரயில் விபத்துகள் குறைந்துள்ளதாக குறிப்பிட்டாா். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 171 ரயில் விபத்துகள் நிகழ்ந்த நிலையில், நிகழ் நிதியாண்டில் இதுவரை 29 ரயில் விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.
ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடும் 10 ஆண்டுகளில் பன்மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. 2014-இல் ரயில்வேக்கு ரூ. 29,000 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 2.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்றாா்.
நிலம் கையகப்படுத்த எம்.பி.க்கள் உதவ வேண்டும்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேமம் ரயில் முனைய திட்ட தாமதம் மற்றும் நிதி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘நெரிசல் மிகுந்த நகரங்களில் அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவும், புதிய ரயில் முனையங்களை அமைக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நேமம் ரயில் முனைய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக ஏற்கெனவே ரயில்வே சாா்பில் ரூ. 2,150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கேரளம் முழுவதிலும் ஆளுமை மிக்க எம்.பி. சசி தரூா், ரயில்வே திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த உதவ வேண்டும். தேவைப்பட்டால் மாநில தலைமைச் செயலகத்தின் முன்பு அவா் தா்னாவில் ஈடுபட்டு, நிலம் கையகப்படுத்த உதவ வேண்டும்.
ரயில்வே சாா்பில் திட்டமிடப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை ரயில்வே கையகப்படுத்த தமிழகம், கேரள மாநில அரசுகளுடன் அந்தந்த மாநில எம்.பி.க்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ரயில்வேக்கு உதவ வேண்டும் என்றாா்.
ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 56,993 கோடி மானியம்
‘அனைத்து வகுப்பு ரயில் பணிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 56,993 கோடி மானியத்தை இந்திய ரயில்வே அளித்து வருகிறது’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
பல்வேறு பிரிவு ரயில் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த டிக்கெட் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா? என்று மக்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சா் பதிலளித்ததாவது:
ரயிலில் பயணிக்கும் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் 46 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. பயணச் சீட்டின் கட்டணம் ரூ. 100-ஆக இருக்கும் நிலையில், பயணிகளிடமிருந்து ரூ. 54 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதன்படி, அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் டிக்கெட்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 56,993 கோடி மானியத்தை ரயில்வே அளித்து வருகிறது என்றாா்.
அதிவிரைவு ரயில் சேவை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், ‘நமோ பாரத் அதிவிரைவு ரயில் சேவை’ என்ற பெயரில் குஜராத் மாநிலம் புஜ் - அகமதாபாத் இடையே ஏற்கெனவே அதிவிரைவு ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புஜ்ஜிலிருந்து அகமதாபாத் வரையிலான 359 கி.மீ. தொலைவை 5 மணி 45 நிமிஷங்களில் ரயில் சென்றடையும்’ என்றாா்.