உலக செஸ் சாம்பியன்ஷிப்: 7-வது சுற்றும் டிராவில் முடிந்தது!
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இன்று நடைபெற்ற 7-வது சுற்று டிரா செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.
14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இந்தத் தொடரின் முதல் சுற்றில் டிங் லிரேனும் மூன்றாவது சுற்றில் குகேஷும் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.
மேலும் 4,5,6-வது சுற்றுகளும் தொடர்ந்து டிராவிலேயே முடிந்தன.
இருவரின் மீதும் கடந்த சுற்று டிரா செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில விமர்சனங்கள் எழுந்தன. ஆட்டத்தில் பிடிப்புடன் இல்லததாக பிரபல செஸ் வீரர்கள் விமர்சித்தனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷ் வெள்ளைக் காய்களில் விளையாடினார். குகேஷ் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடி முடிந்தவரை ஆட்டம் டிராவில் முடிப்பதைத் தவிர்த்துக் கொண்டே இருந்தார்.
இதையும் படிக்க | உலக செஸ் சாம்பியன்ஷிப்: 46 நகர்வுகளில் 6-வது சுற்று டிராவில் முடிந்தது!
கருப்புக் காய்களில் ஆடிய லிரேன் தனது நகர்த்தல்களின் மீது அதிருப்தியுற்று வழக்கம்போல தலையில் கைவைத்தார். அவர் இவ்வாறு செய்வது எதிராளியை குழப்பமடையச் செய்வதற்கு எனச் சொல்லப்பட்டாலும் இன்று அவர் அமைதியிழந்தே காணப்பட்டார்.
இருவரும் தங்களுக்கு வழங்கப்படும் தலா 2 மணி நேரங்களில் 40 நகர்த்தல்களை முடித்தால் போனஸ் 30 நிமிடங்கள் வழங்கப்படும். இருவருக்கும் அது வழங்கப்பட்டது. ஆனால், அதிலும் ரிலேன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டார்.
இறுதியில் இருவரும் ஆட்டத்தை டிரா செய்தனர். 7 சுற்றுகளில் முடிவில் இருவரும் தலா 3.5 புள்ளிகளில் எடுத்துள்ளனர்.
குகேஷ் இந்தமுறை 31% -க்கும் மேலான நேரத்தைக் கண்களை மூடியபடி செலவிட்டதாக விளையாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.