கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் கைது!
சென்னையில் கஞ்சா விற்பனையாளர்களோடு தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகனை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருள்களை சென்னை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
கைதானவர்களின் செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் மற்றும் மூன்று பேர் இவர்களோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்(வயது 26) உள்பட 4 பேரை பிடித்து சென்னை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
விசாரணையை தொடர்ந்ர்து அலிகான் துக்ளக் உள்பட 4 பேரையும் காவல்துறையினர் புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க : மகாராஷ்டிர முதல்வராகிறார் தேவேந்திர ஃபட்னவீஸ்!
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ள மன்சூர் அலிகான், தற்போது குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவரது மகன் அலிகான் துக்ளக் கடமான் பாறை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை மன்சூர் அலிகானே இயக்கி தயாரித்தது குறிப்பிடத்தக்கது.