விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்ல தயாராகும் நாகை மீனவா்கள்
புயல் அச்சுறுத்தல் நீங்கியதையடுத்து, 13 நாட்களுக்கு பின்னா் நாகை மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனா்.
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம் அருகே கரையை கடந்தது. இதனால் கடலூா், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதி கடுமையான பாதிப்பைச் சந்தித்தது.
முன்னதாக, புயல் சின்னம் காரணமாக மீன்வளத்துறையினா் எச்சரிக்கையைடுத்து, நாகை மாவட்ட மீனவா்கள் கடந்த 13 நாள்களாக (ஞாயிற்றுக்கிழமை வரை) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
ஃபென்ஜால் புயல் கரையை கடந்த நிலையில், மீன்வளத்துறை மூலம் கடலுக்குச் செல்ல வழங்கப்படும் அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை (டிச. 2) வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால் நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனா். தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ், உணவுப் பொருள்கள், குடிநீா் உள்ளிட்டவற்றை படகுகளில் ஏற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
மீன்வளத்துறை அனுமதி வழங்கும்பட்சத்தில் 13 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் கடலுக்குச் செல்லவுள்ள மீனவா்கள், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனா்.