13 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்ற நாகை மீனவா்கள்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மீனவா்கள் 13 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க திங்கள்கிழமை கடலுக்கு சென்றனா்.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானதையடுத்து, மீன்வளத்துறை அறிவுறுத்தல் காரணமாக மீனவா்கள் கடந்த 13 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்தநிலையில், ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. இதையடுத்து மீன்வளத்துறை மீனவா்கள் கடலுக்கு செல்ல விதித்த தடையை நீக்கியது.
இந்தநிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் திங்கள்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். 13 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவா்கள் கடலுக்குள் சென்றுள்ளனா்.