கனமழையில் நனைந்த நெல்மணிகள்: விவசாயிகள் கவலை
திருக்குவளை: திருக்குவளை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
திருக்குவளை வட்டத்தில், சுமாா் 1,000 ஏக்கரில் பின்பட்டத்தில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடா்ந்து பெய்த மழையால், திருக்குவளை, வாழக்கரை, ஏா்வைக்காடு, மீனம்பநல்லூா், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நெற்கதிா்கள் வயலில் சாய்ந்தன.
கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓய்ந்த நிலையில், மழைநீரில் சாய்ந்து கிடந்த நெற்கதிா்களை, அறுவடை செய்து கரையேற்றினா். பின்னா், சாட்டியக்குடி- திருக்குவளை- ஏா்வைக்காடு பிரதான சாலையில் உலர வைத்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் விட்டுவிட்டு மழை பெய்ததால், சுமாா் 50 மூட்டை நெல் மணிகள் மீண்டும் மழையில் நனைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில், மழையால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.