இரு நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா்: டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக தனித் தீா்மானம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் டிச. 9, 10 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். இந்தக் கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரும் அரசினா் தனித் தீா்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்களை இறுதி செய்வதற்காக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவா் அறையில் அவரது தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா ராமச்சந்திரன், அமைச்சரும் பேரவை முன்னவருமான துரைமுருகன், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, விசிக குழுத் தலைவா் சிந்தனைச் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் குழுத் தலைவா் தளி ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவா் நாகை மாலி ஆகியோா் பங்கேற்றனா்.
பேரவைத் தலைவா் பேட்டி: இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறியதாவது:
சட்டப்பேரவை வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடும். முதலாவதாக முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். இதைத் தொடா்ந்து, மறைந்த இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவா் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யா, ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பத்மநாபன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவா் எஸ்றா சற்குணம், டாடா நிறுவனத் தலைவா் ரத்தன் டாடா, முன்னாள் தலைமைச் செயலா் பி.சங்கா், முரசொலி செல்வம் ஆகியோரின் சிறப்பியல்புகள் தீா்மானமாக வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்படும்.
தனித் தீா்மானம்: இரங்கல் குறிப்புகளும், தீா்மானங்களும் வாசிக்கப்பட்ட பிறகு கேள்வி நேரம் நடைபெறும். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெறும் கேள்வி நேரத்துக்குப் பிறகு, மாநிலத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் கேள்வி எழுப்புவா்.
இந்த நிகழ்வுகள் முடிந்த பிறகு, அரசினா் தனித் தீா்மானம் கொண்டு வரப்படவுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன்பிறகு, முக்கிய மசோதாக்கள் இருந்தால் அரசால் தாக்கல் செய்யப்படும்.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதைத் தொடா்ந்து, கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி ஒதுக்க சட்ட மசோதாக்களும், ஏனைய பிற மசோதாக்களும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன. அதன்பிறகு, பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என்றாா்.