அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடியில் ஈடுபட்டவருக்கு, 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் செந்தில்முருகன் (45). இவா், கடந்த 2012 ஆம் ஆண்டு, குரும்பலூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்நியான் மகன் குழந்தை (65) என்பவரிடம், அவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 6 லட்சம் பெற்றுள்ளாா். ஆனால், வேலை வாங்கி தரவில்லையாம். இதையடுத்து, பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு குழந்தை பலமுறை கேட்டும் தரவில்லையாம்.
இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவில் குழந்தை அளித்த புகாரின்பேரில், செந்தில்முருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். இவ் வழக்கு விசாரணை பெரம்பலூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி, செந்தில்முருகனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம்அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். பின்னா், செந்தில்முருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.