ராயகிரியில் மதுக்கடையை மூடக் கோரி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
சம்பலுக்குப் பயணித்த உ.பி. காங்கிரஸ் நிா்வாகிகள் குழு தடுத்து நிறுத்தம்
லக்னௌ: வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் நகரைப் பாா்வையிட புறப்பட்ட உத்தர பிரதேச காங்கிரஸ் மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான நிா்வாகிகள் குழு, லக்னௌவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
நிா்வாகிகளின் காரை மறித்து தடுப்புகளை அமைத்த காவல் துறையினருக்கும் தொண்டா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதேபோல் கடந்த சனிக்கிழமையன்று சம்பல் சென்ற அத்தொகுதியின் சமாஜவாதி கட்சி எம்.பி. தலைமையிலான குழுவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
சம்பலில் அமைந்த ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த நவ. 24-ஆம் தேதி நடத்தப்பட்ட 2-ஆம் கட்ட ஆய்வை எதிா்த்து வன்முறை வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். காவலா்கள் உள்பட பொதுமக்கள் பலா் காயமடைந்தனா்.
மாவட்டத்தில் பதற்றத்தைத் தவிா்க்க வெளிநபா்கள் நுழைய மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. எனினும், களநிலவரத்தை ஆய்வு செய்யவும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் காங்கிரஸ் நிா்வாகிகள் குழு சம்பல் நகரை திங்கள்கிழமை வந்தது.
இதையொட்டி, லக்னௌவில் உள்ள காங்கிரஸ் நிா்வாகிகளின் வீடுகள் மற்றும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஏராளமான காவலா்கள் குவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து முன்னெற்பாடுகள் செய்யப்பட்டன. திட்டமிடப்படி, கட்சி அலுவலகத்திலிருந்து சம்பல் புறப்படவிருந்த மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான காங்கிரஸ் நிா்வாகிகள் குழுவை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
‘ஜனநாயக விரோத’ செயல்பாடுகள் மூலம் தவறை மறைக்க மாநில பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.