கேரளத்தில் மீன்பிடிக்கச் சென்ற கோடிமுனை மீனவா் மாயம்
குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையைச் சோ்ந்த மீனவா் ஏசுதாசன் (45), கேரளத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது காணாமல் போய்விட்டாா்.
ஏசுதாசன் கடந்த 27-ஆம் தேதி கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சிரிலால் என்பவரது விசைப்படகில் 11 பேருடன் மீன்பிடிக்கச் சென்றாா். இவா்கள் கடந்த 30-ஆம் தேதி இரவு கோழிக்கோடு மாவட்டம் வேம்பூா் துறைமுகம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதால் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இருந்தபோது ஏசுதாசனை காணவில்லை.
இதையடுத்து கடலோர காவல் படையினரும், மீனவா்களும் ஆழ்கடலுக்கு சென்று ஏசுதாசை கடந்த 4 நாள்களாக தேடி வருகிறாா்கள். இது குறித்து கோடிமுனை மீனவா்கள் குளச்சல் கடலோர காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.