சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்
பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ சங்க மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரெங்கநாதன், மாவட்ட பொருளாளா் இன்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என். செல்லத்துரை, ஏ. கலையரசி ஆகியோா் கோரிக்கைளை விளக்கி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தில் புதியதாக சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும். ஏற்கெனவே இயங்கி வரும் ஆட்டோக்களை சிஎன்ஜி ஆட்டோக்களாக மாற்றம் செய்ய மானியம் வழங்கவேண்டும்.
தனியாா் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை கைவிட வேண்டும். புதிய அனுமதிகளுக்கான தடையை நீட்டித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டது.
தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்து கலைந்துசென்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.