சிவகங்கை அருகே சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
சிவகங்கை அருகே சேறும்சகதியுமாக உள்ள சாலையில் புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக மேலப்பூங்குடி கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:
சிவகங்கை அருகே உள்ள மேலப்பூங்குடி கிராமத்தில் சுமாா் 800 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் முக்கிய சாலையாக மேலப்பூங்குடி- திருமலை செல்லும் 4 கி.மீ. தொலைவுக்கான இந்தச் சாலை கடந்த 2016 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இதன் பிறகு இதுவரை இந்தச்சாலை புதுப்பிக்கப்பட வில்லை. இதன் காரணமாக முற்றிலும் சேதமடைந்து, குண்டும்குழியுமாக மாறிவிட்டது. மழைக் காலங்களில் இந்தச் சாலையில் உள்ள பள்ளங்களில் குளம் போல தண்ணீா் தேங்கி நிற்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா்.
இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், வாகன ஓட்டிகள், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சேதமடைந்த மேப்பூங்குடி திருமலை சாலையில் புதிய தாா் சாலை அமைக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.