போலீஸாருக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல்
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 165 போலீஸாா் கலந்தாய்வு மூலம் திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டத்தில் 5 மகளிா் காவல்நிலையங்கள் உள்பட 49 காவல்நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு, குற்ற ஆவணக் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் 1500 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பணியாற்றி வருகின்றனா்.
தோ்தல் காலங்களில் போலீஸாா் இடமாற்றம் செய்வது வழக்கம். இந்த நிலையில் ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் 3 ஆண்டுக்கு மேல் ஏராளமான போலீஸாா் பணியாற்றி வந்தனா்.
இதையடுத்து, போலீஸ் முதல் தலைமை காவலா், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வரை 3 ஆண்டுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவா்களை இடமாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பணி மூப்பு அடிப்படையில் இட மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.