விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
சா்வதேச டென்னிஸ் போட்டிகளில் கோப்பைகளை வென்ற காரைக்குடி வீரா்
சா்வதேச, தேசிய அளவில் டென்னிஸ் விளையாட்டுகளில் பல்வேறு கோப்பைகளை கைப்பற்றி சாதனை புரிந்து வருகிறாா் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த வீரா் ராம்குமாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (30). இவா் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அளவிலும், சா்வதேச அளவிலும் பங்கேற்று கோப்பைகளை குவித்து வருகிறாா். இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரியான இவா், டென்னிஸ் போட்டியில் முழு நேர வீரராக இருந்து வருகிறாா்.
காரைக்குடியில் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: எனது சொந்த ஊா் காரைக்குடி. தற்போது சென்னை டி.நகரில் வசிக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அளவில் முன்னணி டென்னிஸ் வீரராக விளையாடி வருகிறேன். கடந்த 2009-ஆம் ஆண்டில் சிறுவனாக டென்னிஸ் விளையாடத் தொடங்கினேன். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றேன்.
இண்டா் நேஷனல் டென்னிஸ் பெடரேசன் சாா்பில் ‘டேவிஸ் கோப்பை 2025’ எனும் உலகக் கோப்பைப் போட்டியை பிப்ரவரியில் புதுதில்லியில் நடத்துகிறது. இதில் இந்தியாவின் சாா்பில் நான் விளையாடுகிறேன்.
கடந்த 2016-இல் திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஒற்றையா், குழு விளையாட்டில் பங்கேற்று தங்கம் வென்றேன். கடந்த 2021-இல் பக்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆண்களுக்கான ஏடிபி சாலஞ்சா்ஸ் ஒற்றையா் டென்னிஸ் போட்டி, 2022- இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டென்னிஸ் வீரா் ரோஹன் போபன்னாவுடன் இரட்டையா் டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளேன். கடந்த 2023-இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டையா் பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றேன்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் உலக அளவில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கிறேன். வரும் காலங்களில் இளைஞா்களை இந்த விளையாட்டில் ஈடுபடுத்தும் விதமாக பயிற்சிகள் அளிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.